அன்றாட பாதிப்பில் சென்னையை முந்திய கோவை; புதுக்கோட்டை ஆட்சியருக்கு தொற்று
புதுடெல்லி: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாநிலத்தின் மேற்கு, மத்திய மாவட்டங்களில் தொற்று விகிதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் புதிதாக 26,513 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று 490 இறப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது தமிழகத்தில் சுமார் 296,000 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 24,722 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
தற்போதைய நிலவரப்படி கோவை மாவட்டத்தில்தான் அன்றாடம் பதிவாகும் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று கோவையில் 3,332 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, திருப்பூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து பதிவாகி உள்ளது.
மாநிலத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில்தான் ஆகக் குறைவாக 277 பேருக்கு மட்டும் புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
இந்நிலையில் கடந்த 20 தினங்களாக எட்டு மேற்கு மாவட்டங்களில் புது நோயாளிகளின் எண்ணிக்கை 73 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதேபோல் மத்திய மாவட்டங்களில் 67 விழுக்காடு அளவிற்கு புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கு நேர்மாறாக, தெற்கு, வடக்கு மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்றியோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சுமார் 220 பேர் தினமும் பலியாகி வந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை சராசரியாக 480ஆக உள்ளது.
ஆட்சியருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

