புதுடெல்லி: உற்பத்திக்குறைவு காரணமாக இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக மத்திய வெளியுறச் செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மருந்து நிறுவனங்களான ஃபைசர், மொடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகியவற்றுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டில் உற்பத்தியாகும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் வேளையில் அமெரிக்க நிறுவனங்களின் தடுப்பூசிகளை உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பாக அவற்றுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஹர்ஷ் ஷ்ரிங்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.
'தென்கிழக்கு ஆசியாவின் வட்டார சுகாதார பங்காளிகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஷ்ரிங்லா, உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியைத் துரிதப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். மூலப்பொருட்கள், இதர கூறுகளுக்கான விநியோகச் சங்கிலி தொடர்பில் ஏற்படக்கூடிய ஒழுங்குமுறை இடையூறுகளைத் தளர்த்துவது அவற்றில் முக்கியமான ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். உலக சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"கொரோனா தொற்றுப் பரவல் அதன் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இரண்டாவது அலையை எதிர்த்து இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது. இக்காலகட்டத்தில் அசாதாரணமான அழுத்தங்கள், அதிர்ச்சிகளை நாடு கடந்து வந்துள்ளது. மேலும் எதிர்பாராத பொருளாதார, சமூக இடையூறுகளையும் இக்காலகட்டத்தில் இந்தியா எதிர்கொண்டுள்ளது," என்றார் ஹர்ஷ் ஷ்ரிங்லா.
கொரோனா தொற்று நோய்த் தாக்கத்தை சமாளிக்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மொடர்னா உள்ளிட்ட மருந்து நிறுவனங்களுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.
மேலும், 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உதவி இருப்பதாகவும் அவர் கூறினார்.

