புதுடெல்லி: பிரபல மலபார் குழுமம் ஒரு லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் வளாகத்திலும் முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்தும் தடுப்பூசிகள் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி இயக்கத்திற்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மலபார் குழுமத்தின் தலைவர் அஹமட் தெரிவித்துள்ளார்.
"நாடு தழுவிய தடுப்பூசி போடும் திட்டத்திற்கு எங்களுடைய பங்களிப்பின் முதல் படி இதுவாகும். எங்களது கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்த தொற்றுநோயால் எளிதில் பாதிக்கப்படுபவர்களை அணுகத் திட்டமிட்டுள்ளோம்.
"வயதில் மூத்தவர்கள், நாள்பட்ட நோய்ப்பாதிப்பு உள்ளவர்கள், தொண்டூழியச் சங்கங்கள், ஒத்த சிந்தனை கொண்ட அமைப்புகள் மூலம் பயனாளர்கள் அடையாளம் காணப்படுவர்," என்று அஹமட் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் 100,000 தடுப்பூசிகளை இலவசமாக வழங்க மலபார் குழுமம் முடிவு செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே இக்குழுமம் பயன்படுத்த உள்ளது.
நகை கைவினைக் கலைஞர்கள், தனது ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது என அக்குழுமம் தெரிவித்துள்ளது.

