மோசமான மொழி என காட்டப்பட்ட விவரங்கள்: மன்னிப்புக் கோரிய கூகல்
பெங்களூரு: இந்தியாவின் மோசமான மொழி என்று கூகல் இணையத்தளத்தில் விவரங்களைத் தேடும்போது கன்னட மொழி என்று காட்டப்பட்டதற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரி உள்ளது. இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டியது அம்மொழியைப் பேசும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கூகல் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என கர்நாடக மாநில கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் கூகல் தேடுதளத்தில் வெளியான தவறான பதிவுகள் நீக்கப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் மன்னிப்புக் கோருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே மாதம் 550 மி. பயனாளர்களுக்கு உணவு தானியங்கள் விநியோகம்்
புதுடெல்லி: கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 550 மில்லியன் பயனாளர்கள் தானியங்களைப் பெற்றுள்ளனர் என உணவு, பொது விநியோகச் செயலாளர் கூறியுள்ளார். ஏறக்குறைய 28 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 550 மில்லியன் தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு கடந்த மே மாதத்தில் வழங்கியுள்ளது. இதேபோன்று நடப்பு ஜூன் மாதத்தில் 26 மில்லியன் பயனாளிகளுக்கு 1.3 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொற்றைப் பரப்ப மருமகளை கட்டியணைத்த மாமியார்
ஹைதராபாத்: மருமகளுக்கும் கொரோனா தொற்றைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட மாமியார் மீது தெலுங்கானா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மாமியாரை கிருமி தொற்றியது. இதையடுத்து மருமகள் மீது பாசம் காட்டுவதுபோல் நடித்து பலமுறை கட்டியணைத்துள்ளார் அந்த மாமியார். மேலும் தனது பேரக் குழந்தையையும் கொஞ்சுவதும் அரவணைப்பதுமாக இருந்துள்ளார். இதையடுத்து மருமகளுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டது. பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டதும், தன் மருமகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் மாமியார். அவரது மகன் ஒடிசாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
கள்ளச்சாராயத்துக்கு 9 பேர் பலி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மேலும் ஒன்பது பேர் பலியாகிவிட்டனர். அண்மையில்தான் அங்கு 52 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துவிட்ட நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல் சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராய வியாபாரிகள் தங்களிடம் மீதமிருந்த சாராயத்தை ஒரு பாலத்தின் அடியில் பதுக்கி வைத்துள்ளனர். அதைக் கண்ட கூலித்தொழிலாளர்கள் சிலர் யாருக்கும் தெரியாமல் அதை எடுத்துக் குடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 27 தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்பது பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

