புதுடெல்லி: எல்லைப் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கையை சீனா முழுமையான அளவில் மேற்கொள்ளவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஷயத்தில் சீன அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதன்மூலம் புதிய சம்பவங்களைத் தவிர்க்கமுடியும் என்றும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும் எனில் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை விரைவாக முடிவுக்கு வரவேண்டும். அப்போதுதான் எல்லையில் முழுமையான, நீடித்த அமைதி திரும்பும். இத்தகைய நடவடிக்கைதான் இருதரப்பு உறவுகள் முன்னேற்றம் காண கைகொடுக்கும்," என இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் சீனா மீண்டும் படைகளைக் குவித்து வருவதாகவும் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளில் மீண்டும் கட்டுமானப் பணிகளில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டிருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அரிந்தம் பக்சி, எல்லைப் பகுதியில் சீனா தனது துருப்புகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை இன்னும் முழுமை அடையவில்லை என்றார்.
"இடைக்கால ஏற்பாடாக இருதரப்பும் புதிய சம்பவங்கள் நிகழாத வண்ணம் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இவ்விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கடைபிடிப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே நமது எதிர்பார்ப்பு. எனவே இந்தப் புரிதலுக்கு எதிராக இருதரப்பும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்பது முக்கியம்," என்றார் அரிந்தம் பக்சி.

