சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்துக்குத் தளர்வு களுடன் கூடிய ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
மாநிலம் முழுவதும் கிருமிப் பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண் டார்.
இந்த ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மதுக்கடை களைத் திறக்க வாய்ப்புள்ளதாகவும் பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் தளர்வுகள் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் குறித்து இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொரோனா கிருமிப் பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அறிக்கை ஒன்றில் முதல்வர் கூறியுள்ளார்.
திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது முழுக்க முழுக்க அரசு முறைப் பயணம் என்றும் தெரிவித்துள்ளார்.

