ஊரடங்கை மீறுபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வகையில் கார், இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களைத் தடுத்து நிறுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டனர். பின்னர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கோவையில் கிருமிப் பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும், உயிர்ப் பலி அதிகமாக உள்ளது. இதைத் தடுக்க கோைவ மாநகராட்சி சுகாதாரத் துறையினர் அவ்வழியாக வருவோர் போவோரை நிறுத்தி, அவர்களிடம் கொரோனா மாதிரிகளைச் சேகரித்தனர்.
அமைச்சர்: நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும்
மதுரை: மதுரையில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
"கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்குள் பெறப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும்," என்று கூறியவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான விசாரணை தொடங்கியது
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ், 41, மீதான சிபிசிஐடியின் விசாரணைப் பிடி இறுக ஆரம்பித்துள்ளது. கெபிராஜிடம் சிபிசிஐடி அதிகாரியான ஆய்வாளர் லதா விசாரணை நடத்த உள்ளார். கெபிராஜிடம் காவல்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், அரசியல் பிரமுகர்களின் பிள்ளைகள் என 30,000க்கும் மேற்பட்டோர் கராத்தே பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த எட்டு வருடத்திற்கு முன்னதாக கெபிராஜ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் கைதானார்.
முருகன்: சொன்னதை செய்யுங்கள்
சென்னை: தமிழக பாஜக விவசாய அணி சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு ஒரு லட்சம் முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நடந்தது. அதன்பின் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசியபோது, "திமுக தலைமையிலான அரசு அமைந்து 30 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. அக்கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் திமுக அரசு உடனே துவங்கவேண்டும். இந்து சமய அறநிலையத் துறை சொத்து ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதில் பாரபட்சம் காட்டக் கூடாது," என்று அவர் கூறினார்.

