சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஒரு மாதமே முடிவுற்றுள்ள நிலையில், மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல புதுப்புது திட்டங்களையும் அறிவித்து வருகிறார்.
இந்தத் திட்டங்களின் வரிசை யில், மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் செல்லும் உதவியாளர் ஒருவரும் பேருந்தில் கட்டணமின்றி, இலவசமாகப் பயணம் செய்யலாம் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என முதல்வர் அறிவித்தார்.
இத்திட்டம் கடந்த மாதம் 8ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
அதனைத்தொடர்ந்து, திருநங்கைகளும் தங்களுக்கு சலுகை களை வழங்கும்படி கோரினர்.
இதையடுத்து, திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்குத் துணையாகச் செல்லும் உதவியாளர் ஒருவருக்கும் கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பயணத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத் துறைச் செயலா் ஆா்.லால்வேனா பிறப்பித்துள்ளாா்.
அதில், "மாற்றுத்திறனாளிகள் உதவியாளா் ஒருவருடன் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பேருந்து நடத்துநரிடம் மாற்றுத்திறனாளிகள் காண்பிப்பது அவசியம்," என்று கூறப்பட்டுள்ளது.

