சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மொத்தம் 142 இடங்களில் போராட்டம் நடைபெற்றதாக தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அப்பகுதி காங்கிரசார் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து வந்ததுடன் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
வட மாநிலங்களை அடுத்து தமிழகத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயை நெருங்கியுள்ளது.
இதே நிலை நீடித்தால் சாமானியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்றும் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
"இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் நடத்திய ஆட்சியை விட, தற்போது மத்தியில் உள்ள ஆட்சி மோசமாக இருக்கிறது," என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாடினார்.

