சென்னை: தடுப்பூசிகள் குறித்து அனைத்துத் தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் தடுப்பூசி மையங்களில் வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை தவிர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி கையிருப்பு, விநியோக நிலை உள்ளிட்ட தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தடுப்பூசிகள் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டும் என மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்துக்கு இதுவரை 10,163,000 தடுப்பூசிகள் வந்துள்ளன என்றும் அவற்றுள் 9,762,957 மக்களுக்குப் போடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 36 மாவட்டங்களில் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்றும் அவர் கூறியதாக தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக நிலவரம்
இதற்கிடையே தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் 16,813 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 358 பேர் உயிரிழந்து விட்டனர். நேற்று முன்தினம் 171,237 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 45 பேர் மாண்டுவிட்டனர். 188,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல்வர் கடிதம்
இந்நிலையில் நோய்த்தொற்று இல்லாத தமிழகம் உருவாகும் என திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கட்சி எல்லைகளைக் கடந்து தமிழக அரசு பாராட்டுகளைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பேரிடர் காலத்தில் நாம் கட்டுண்டு இருக்கிறோம். பொறுத்திருப்போம், காலம் விரைவில் மாறும். நோய்த்தொற்றில்லாத தமிழகம் உருவாகும்," என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெண்களுக்கு ஆர்வமில்லை
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது. மாநிலம் முழுவதும் ஆயிரம் ஆண்களுக்கு 811 பெண்கள் என்ற விகிதத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
ராமதாஸ் வலியுறுத்து
தமிழகத்தில் தொற்று பாதிப்பு தற்போது பாதியாகக் குறைந்திருப்பது உண்மைதான் என்றாலும் இது அரைகுறை ஊரடங்கால் கிடைத்துள்ள அரைகுறை பலன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

