விரைவில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை வெகு விரைவில் நடத்த அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஊரடங்கு முடிந்த கையோடு மாவட்ட செயலாளர்களை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அக்கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்து உள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நேரில் சந்தித்துப் பேச விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
டுவிட்டரில் குஷ்பு: 'பாரத பேரரசு'
சென்னை: தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மத்தியில் உள்ள அரசை ஒன்றிய அரசு என அழைத்தால் நாம் பாரத பேரரசு என்று அழைப்போம் என நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை தரம் தாழ்ந்த நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி. வாழ்க பாரத தேசம். வாழ்க தமிழகம்" என்று குஷ்பு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து லட்சம் ரூபாய் சுருட்டிய காவலர்கள் பணி இடைநீக்கம்
சென்னை: நகைக்கடை ஒன்றில் 5 லட்சம் ரூபாய் திருடிய போலிசார் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு வேளையில் சென்னையில் உள்ள ஒரு நகைக்கடை இரவு நேரத்தில் திறந்திருப்பதைக் கண்ட சுஜின், முஜிபுர் ரகுமான் ஆகிய இரு காவலர்களும் கடைக்குள் நுழைந்துள்ளனர். அங்கு கடை உரிமையாளர் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டு, கடையை உடனடியாக மூடுமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், உரிமையாளருக்குப் பணக்கட்டுகளை எண்ண உதவி செய்வது போல் நடித்த இருவரும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணக்கட்டு ஒன்றை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடை உரிமையாளர் போலிசில் புகார் அளித்தார். விசாரணையில் காவலர்கள் இருவரும் பணத்தை எடுத்தது உறுதியானது.
வாக்களிக்க தந்த டோக்கனுக்கு பணம் கோரிய பொதுமக்கள்
சேலம்: தேர்தலில் வாக்களிக்க ஒரு வாக்குக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை பாமக எம்எல்ஏ நிறைவேற்றத் தவறிவட்டதாக வாக்காளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் பாமகவின் அருள். இவருக்கு வாக்களித்தவர்கள் தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்ட டோக்கன்களுடன் எம்எல்ஏவின் வீடு அல்லது அலுவலகத்துக்கு வந்து பணம் பெற்றுச் செல்லலாம் என்று சமூக வலைத்தளங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாரோ பதிவிட்டிருந்தனர். இதை நம்பி பாமகவின் மாம்பழம் சின்னம் இடம்பெற்றுள்ள டோக்கன்களுடன் மக்கள் பலர் கூடிவிட்டனர். இதுகுறித்துத் தகவல் அறிந்த எம்எல்ஏ அருள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கோட்டமேடு ஊராட்சியில், தேர்தல் சமயத்தில் விநியோகித்த டோக்கன்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ரொக்கமோ அல்லது அதற்கு ஈடான மளிகைப் பொருட்களோ விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வானதி சீனிவாசன் குறித்து அவதூறு பதிவு: போலிசில் புகார்
கோவை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக இருவர் மீது அக்கட்சியின் மகளிரணியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ரவிசங்கர், ஜெகநாதன் ஆகிய இருவரின் பெயரைக் குறிப்பிட்டு இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கீதா டிவி என்ற பெயரில் இயங்கும் 'யூடியூப் சேனல்' மூலம் கீதா என்ற பெண்மணியும் பாஜக குறித்து அவதூறு பரப்புவதாகவும் தனி மனித விமர்சனத்தில் ஈடுபடுவதாகவும் பாஜக மகளிரணியினர் புகாரில் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜக குறித்தும் அதன் நிர்வாகிகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கத் தொடங்கியவர்கள் தேர்தல் முடிந்த பிறகும் தனி மனித தாக்குதலில் ஈடுபடுவதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

