சென்னை: மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாளை 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருமி பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் முடிவெட்டும் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட பல கடைகளும் செயல் படுவதற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, தேநீர் கடையைத் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆனால், காலை 10 முதல் மாலை 5 மணிவரை மதுக்கடை யைத் திறக்க அனுமதித்துள்ளது.
இதையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் மதுபானக் கடையைத் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"ஒவ்வொரு நாளும் கொரோனா கிருமித்தொற்றால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். இறப்பும் நூற்றுக்கணக்கில் பதிவா கிறது. இந்தச் சூழலில் மதுக்கடைகளைத் திறப்பது அவசியமா," என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதான் உங்கள் விடியலா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஊடரங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது. மதுக்கடை திறப்பு என்பது மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது," என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடவேண்டும் என அப்போதைய அதிமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த ஸ்டாலின், தற்போது மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
"கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை மதுக்கடையைத் திறக்கக்கூடாது," என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கோவில்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான தடை தொடர்கிறது. பொதுப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை. ஓட்டல்களில் 'பார்சல்' சேவை தொடர்ந்தாலும் தேநீர் கடையைத் திறப்பதற்கு அனுமதி இல்லை.
"உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்த அரசு, உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் தேநீர் கடையைத் திறப்பதற்கு அனுமதிக்காதது ஏமாற்றம் தருகிறது," என தேநீர் பிரியர்கள் கூறியுள்ளனர்.

