காயத்ரி ரகுராமுக்கு அழைப்பாணை
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் மக்களவை எம்பியுமான திருமாவளவன் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத் தளத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகத் தெரிகிறது. இந்த வழக்கின் தொடர்பில் நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராமை ஜூலை 12ஆம் தேதி நேரில் முன்னிலையாகும்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
ஒரே தெருவில் 35 பேருக்கு தொற்று
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அத்திக்குட்டை என்ற பகுதியில் கடந்த பத்து நாள்களில் மட்டும் 35 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அந்தப் பகுதி இரும்புத் தடுப்புகளைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.
கிருமி மற்றவர்களிடம் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்திக்குட்டை பகுதியில் 500 மீட்டர் நீளத்துக்கு இரும்புத் தகரத்தால் மாநகராட்சி அதிகாரிகள் அடைத்துள்ளனர். அத்துடன், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாத வகையில் போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தளர்வைத் தொடர்ந்து 104 விமானங்கள் இயங்கின
சென்னை: கொரோனா கிருமிப் பரவலால் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு விமானப் பயணம் செய்வோர், வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், மும்பை, கோவை, பெங்களூரூ உள்ளிட்ட 19 நகரங்களுக்கு 51 விமானங்களில் பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், 21 நகரங்களில் இருந்து 53 விமானங்கள் மூலம் பயணிகள் சென்னை வந்தனர். ஆகமொத்தம் 104 விமானங்கள் இயங்கினாலும் பெரும்பாலான விமானங் களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
உயிரிழப்பு அதிகரிப்பு குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்று வேகமாக ஒடுங்கிவருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கொரோனாவால் சுமார் 400 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
"கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனையை நாடி வருகின்றனர். அதனால்தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது. கிருமித்தொற்று உறுதியானதும் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் நோயாளியைக் காப்பாற்றிவிடலாம்," என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
முதல் மாத சம்பளத்தில் 22 மாற்று
திறனாளிகளுக்கு உதவிய எம்எல்ஏ
பெரியகுளம்: தனது முதல் மாத ஊதியத்தில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வாங்கிக்கொடுத்து அவர்களை நெகிழ வைத்துள்ளார் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன்.
ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு திமுகவினர் உதவவேண்டும் என ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
ராஜபாளையம் தொகுதியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தோற்கடித்த தங்கபாண்டி யன், வெற்றிபெற்றது முதல் மக்களுக்கு உதவி வருகிறார்.

