மதுக்கடைகளுக்குப் பாதுகாப்பு
சென்னை: தமிழகத்தில் 35 நாட்களுக்குப் பின்னர் நேற்று முதல் கிருமி பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனினும், இந்த மதுக்கடைகளைத் திறப்பதற்கு பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சென்னையில் மதுக்கடைகளை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறப்பட்டதை அடுத்து, போலிஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகள் இயங்கியதாக போலிஸ் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு
கோவை: பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்புக்கு ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜகவினர் வரவேற்றுள்ளனர். "பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. முறையான பயிற்சியை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவேண்டும்," என்று கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்ஏல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில், "பெண்கள் உள்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவை பாஜக வரவேற்கிறது," என்று கூறியுள்ளார்.
கொரோனா நிதியாக தங்கச் சங்கிலி
மேட்டூர்: மேட்டூரைச் சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண் தனக்கு வேலை கேட்டு மனு ஒன்றையும் கொரோனா நிவாரண நிதிக்காக தனது தங்கச் சங்கிலியையும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி இருந்தார். "மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்திலும் கொடை உள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சம் நெகிழவைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என நெகிழ்வுடன் முதல்வர் பதிவிட்டுள்ளார்.
மூன்று நாள்களுக்கு மழை
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும் என்பதால், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் இன்று முதல் மூன்று நாள்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை 16, 17ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஈரோடு, தருமபுரி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி - சோசலிசம் திருமணம்
சேலம்: சேலம் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக உள்ளார். தனது மூன்று மகன்களுக்கும் கம்யூ னிசம், லெனினிசம், சோசலிசம் எனவும் தனது பேரனுக்கு மார்க்சிசம் எனவும் சித்தாந்த பெயர்களைச் சூட்டி உள்ளார். ஞாயிறன்று மணமகன் சோசலிசம், மணமகள் மம்தா பானர்ஜிக்கு நடந்த திருமணம் சமூக வலைத் தளங்களில் மிகவும் பிரபலமானது. படம்: ஏஎஃப்பி

