சென்னை: சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக-பாமக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் பகிரங்கமாக வெடித்துள்ளன. இதன் காரணமாக இக் கட்சிகளின் பிணைப்பு உடையும் அபாயத்தில் இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், அடுத்தடுத்து நடைபெறும் உள்ளாட்சி உள்ளிட்ட தேர்தல்களிலும் இக்கூட்டணி நீடிக்குமா என்பது சந்தேகமே என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
தேர்தலில் பாமக ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், இதுதான் பாமகவின் செல்வாக்கு என்று விமர்சிக்கப்பட்டது.
எனினும், பாமக மீது அதிமுக தரப்பு எந்த ஒரு பெரிய விமர்சனத்தையும் வைக்கவில்லை.
இந்நிலையில், பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ், "பாமக இல்லையெனில் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும்," என விமர்சித்துள்ளார்.
இது அதிமுகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அன்புமணியைச் சாடியுள்ளார்.
"ஆறு தொகுதிகளில் மட்டுமே செல்வாக்குள்ள நிலையில், பாமக இல்லை என்றால் அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று இருக் காது என சொல்வது சரியல்ல.
"ஓபிஎஸ் கையெழுத்துப் போட்டதால்தான் அன்புமணி, மாநிலங்களவை எம்.பி. ஆனார் என்பதை மறக்கலாமா?" எனக் கேட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் புகழேந்தி பேசியபோது, "முதலில் தாங்கள் போட்டியிட்ட 23ல் 18 தொகுதிகளில் தோல்வியடைந்தது பற்றி பாமக சிந்திக்கவேண்டும்.
"பாமகவின் தேர்தல் நிலைப் பாட்டில் நாங்கள் தலையிட விரும்ப வில்லை. அதேபோல், அதிமுக தலைவர்கள் பற்றி அவர்கள் பேசுவதும் முறையல்ல.
"பாமகவால் எந்த வகையிலும் எந்த உதவியும் இல்லை என்பதை அவர்கள் உணரவேண்டும்.
"ஒரு கூட்டணியில் சேருவது, பின்னர் வெளியேறுவது, எங்களால்தான் எல்லாமே நடந்தது என்று கூறுவது பாமகவின் வழக்கம். பாஜக, பாமகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோற்றோம் என்று அதிமுக தலைவர்களோ, நிர்வாகிகளோ பேசவே இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்டோம்.
"ஓபிஎஸ் குறித்து தவறாகப் பேசுவதை நாங்கள் வேடிக்கை பார்ப்போம் என்று கருதினால், அதுமுட்டாள்தனமானது. பாமக போன்ற சிறிய கட்சி, அதிமுகவை கிண்டல் செய்வதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?" என்று புகழேந்தி வினவியுள்ளார்.

