சென்னை: சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு 15 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில், கள்ளக்குறிச்சி எம்.ஆனந்தன், ஈரோடு வி.கே.சின்னச்சாமி உள்ளிட்ட 15 நிர்வாகிகளும் அடங்குவர்.
சசிகலாவுடன் இனி உரையாடு பவர்களையும் உடனடியாக நீக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக இருந்து வருவதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலாவின் ஆசை. அதற்காகவே கடந்த மூன்று மாத காலமாக காய் நகர்த்தி வந்த அவர், ஒலிப்பதிவு ஆடியோவை வெளியிடுவதன் மூலம் தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பித்து உள்ளதாக ஜெயக்குமார் உள்ளிட் டோர் விமர்சனம் செய்தனர்.

