சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நேற்று காலை முதல் தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்க நிலைக் குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
தேநீர் கடைகள், முடிவெட்டும் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட கடைகளைத் திறக்கவும் பூங்காக்களில் நடைப்பயிற்சி செல்ல வும் அரசு அனுமதித்துள்ளது.
ஒன்றரை மாதத்துக்குப் பின்னர் நடைப்பயிற்சி செல்வதற்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆங் காங்கே உள்ள பூங்காக்களில் மக்கள் ஆர்வத்துடன் நடைப்பயிற்சி யில் ஈடுபட்டனர்.
அரசுப் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6 முதல் 9 மணி வரை மூன்று மணி நேரத்துக்கு மட்டுமே நடைப்பயிற்சி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அழகுநிலையங்கள், முடிவெட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.
27 மாவட்டங்களில் தேநீர் வாங்கிச்செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நேற்று காலை 6 மணிக்கு தேநீர் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் பரபரப்பாக நடந்தது.
11 மாவட்டங்களைப் பொறுத்தளவில் வீட்டுப் பராமரிப்பு சேவைகளை மேற்கொள்ளவும் மிதிவண்டி, இரு சக்கர வாகனங்களைப் பழுது நீக்கும் கடைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிருமி பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள நிலையில், நேற்று முதல் வரும் 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் சற்று குறைவான தளர்வுகளும் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்னும் சற்று கூடுதலான தளர்வுகளும் அமல் படுத்தப்பட்டுள்ளன.

