130 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்பு

130 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்பு

2 mins read
93822e54-cc60-4cb8-812b-5a273c7fb947
குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவனை அவசர சிகிச்சை வாகனத்தில் ஏற்றுவதற்கு தனது கைகளில் தூக்கி வருகிறார் முனிராஜ். படம்: ஊடகம் -

ஆக்ரா: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், ஆக்ரா அருகே 130 அடி ஆழ­முள்ள ஆழ்­துளை கிணற்­றில் விழுந்த மூன்­றரை வயது சிறு­வன், எட்டு மணி நேர போராட்­டத்­துக்­குப் பின் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டான்.

ஆக்ரா அரு­கே­யுள்ள தரி­யாய் என்ற கிரா­மத்­தில் சோட்­டே­லால் என்­ப­வ­ரின் மகன் சிவா திங்­க­ளன்று காலை, வீட்டு வாச­லில் விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தான்.

அப்­போது சிவா, 130 அடி ஆழ கிணற்­றுக்­குள் தவறி விழுந்­தான்.

சிவா­வைத் தேடிய பெற்­றோர், ஆழ்­து­ளைக் கிணற்­றில் இருந்து அழு­கு­ரல் கேட்க காவல் நிலை­யத்­திற்கு தக­வல் தெரி­வித்­தனர்.

இதை­ய­டுத்து, ஆக்ரா மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் முனி­ராஜ், 30 பேர் கொண்ட மீட்­புக் குழு­வு­டன் விரைந்­து வந்தார்.

மீட்­புக் குழு­வி­னர் குழிக்­குள் முத­லில் உயிர்­வாயு குழாய்­களை அனுப்­பி­ய­தோடு, சிறு­வ­னின் நிலை அறிய சிறிய காமிரா ஒன்­றை­யும் உள்ளே அனுப்­பி­வைத்­த­னர்.

கையை தலைக்கு மேலே அசைத்­த­படி சிறு­வன் உயிருடன் இருப்­பது உறு­தி­யா­னது.

ராணுவ வீரர்­கள் ஆழ்­து­ளைக் கிணற்­றுக்கு அருகே மூன்று பொக்­லைன் இயந்­தி­ரங்­க­ளைக் கொண்டு குழி­தோண்­டும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். ராணு­வம், தேசி­யப் பேரி­டர், மாநில மீட்­புக் குழு­வி­னர் ஒருங்­கி­ணைந்து மீட்புப் பணி­யில் தீவி­ரம் காட்­டி­ய­தால் 90 அடி ஆழத்­திற்கு பள்­ளம் தோண்­டப்­பட்­டது.

இதற்­கி­டையே, சிறு­வன் விழுந்த குழி­யில் இருந்தே மீட்­க­வும் முயன்றனர். சிறு­வ­னின் கையில் சுருக்­குப் போட்டு அதனை மேலே ஒரு­வர் பிடித்­துக்கொள்ள, மற்ற வீரர்­கள் லாவ­க­மாக சிறு­வனை மேலே தூக்கி வெளியே கொண்டு வந்­த­னர். சிவாவை உயி­ரு­டன் மீட்ட வீரர்­களை அங்கு திரண்­டி­ருந்த கிராம மக்­கள் வாழ்த்­தி­ய­து­டன், ஆர­வா­ரம் செய்து மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னர்.

நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. என் குழந்தையை மீண்டும் உயிருடன் பார்த்துவிட்டேன். குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

சிறுவனின் தந்தை சோட்டேலால்