திருச்சி: சென்னை, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் திருச்சி மாநகரம் பின்தங்கி உள்ளது. இந்த நகரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
"அடுத்தடுத்து பலதரப்பட்ட நவீன வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டு, இன்னும் இரு ஆண்டுகளில் திருச்சியின் முகத்தை பொலிவூட்டும் வகை யில் மாற்றிக்காட்டும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
"இந்த நடவடிக்கைகளில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைப்பு, சாலைகள் விரிவாக்கம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், நீர்நிலைகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும்,'' என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "திருச்சி மாநகராட்சி யில் சுமார் 11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
"தற்போது குடிசைகள், நீர்நிலை கள், சாலையோரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிப்போருக்காக 40 ஏக்கர் பரப் பளவில் அடுக்குமாடி குடியிருப் புகள் கட்டித் தரப்பட உள்ளன.
"இத்திட்டம் குடிசைகள் இல்லாத திருச்சி மாநகரை உரு வாக்கும் கனவை நனவாக்கும்.
"இதற்கான நிலம் தேர்வு, திட்ட மதிப்பீடு தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
"மக்கள்தொகைப் பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கைக் கேற்ப இந்நகரின் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி களையும் விரிவுபடுத்த வேண்டிய தேவை இருந்து வருகிறது," என்று கூறினார்.
திருச்சியின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாகவே பின்தங்கிய நிலையில் இருப்பதாக இங்குள்ள மக்களிடையே வருத்தம் நீடித்து வருகிறது.
அதேபோல இங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கான வீடு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரத்துக்கான திட்டங்களும் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், இங்கு குடிசையில் வசிப்போர், வீடற்றவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு பெற்றுத் தரும் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் அவர்களது வாழ்க்கை உயர் நிலைக்கு மாற்ற அதிகாரி களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இதுதவிர மாநகரப் பகுதிகளில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் குடிசைவாசிகளுக்கும் அவர்களின் இடத்திலேயே அரசுத் திட்டங்கள் மூலம் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.

