தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி.யான ஏ.கே.எஸ். விஜயன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் அடுத்த ஓராண்டுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருப்பார் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். நாளை 17ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ள நிலையில், இந்த நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு
சென்னை: சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், முக்கிய ஆறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுக சட்டமன்றத் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணைக் கொறடாவாக அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு
சென்னை: கிருமிப் பரவல் கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் இதர ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருப்பதால் தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரேநாளில் ரூ.164 கோடிக்கு மது விற்பனை; மதுரை முதலிடம்
மதுரை: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, ஏனைய 27 மாவட்டங்களில் 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. ஏறக்குறைய 35 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, கடந்த 14ஆம் தேதியன்று ஒரே நாளில் சென்னையில் ரூ.42.96 கோடிக்கும் மதுரையில் ரூ.49.54 கோடிக்கும் திருச்சியில் ரூ.33.65 கோடிக்கும் சேலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என மொத்தம் ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை நடந்தது. மதுரை மாவட்டத்தில் தான் ஆக அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது.
14 வகை மளிகைப் பொருள்களுடன் ரூ.2,000 நிதியும் விநியோகம்
சென்னை: கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, நியாயவிலைக் கடைகளில் நேற்று இரண்டாவது தவணையாக ரூ.2,000 பணத்துடன் 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய பையும் வழங்கப்பட்டது.இந்த நிவாரணத்தை ஜூன் 3ஆம் தேதியே முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், நேற்று முதல் மாநிலம் முழுவதும் நிவாரணப் பொருள்களும் பணமும் விநியோகிக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, "இந்த மாத இறுதிவரை பணம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்," என்று கூறியவர், இந்த மளிகைப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

