புதுடெல்லி: கைது நடவடிக்கைக்குப் பயந்து வட இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற சிவசங்கர் பாபா (படம்) டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார் சிவசங்கர் பாபா. அவரது ஆசிரமமும் அங்குதான் உள்ளது.
இந்நிலையில் தமது பள்ளியில் படித்த ஏழை, ஆதரவற்ற மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்மையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்குப் பலவிதங்களில் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மாணவிகள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது.
72 வயதான சிவசங்கர் பாபா கடந்த 20 ஆண்டுகளாக அக்குறிப்பிட்ட பள்ளியை நடத்தி வருகிறார். தந்தையை இழந்த ஏழைச் சிறுமிகளை அவர்களின் தாயாருடன் தனது ஆசிரமத்தில் தங்க வைப்பது அவரது வழக்கம் எனக் கூறப்படுகிறது. தந்தையை இழந்த, வறுமையில் உள்ள குழந்தைகள்தான் அவரது இலக்கு என்று ஒருதரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் சிறப்புப் பூசைகளை நடத்தும் அவர், அதில் தனது கட்டுப்பாட்டில் உள்ள மாணவிகளைப் பங்கேற்கச் செய்வார் என்றும் அந்தச் சமயத்தில் மோசமான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவார் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
சிவசங்கர் பாபா தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று போலிசாரிடம் சிக்கி உள்ளதாகவும், இதனால் அவர் மீதான பிடி இறுகியுள்ளது என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சிவசங்கர் பாபா திடீரென தலைமறைவானார். அவர் வட இந்தியாவில் உள்ள டேராடூனில் பதுங்கி இருப்பதாகவும் தெரியவந்தது. அவரைக் கைது செய்ய தனிப்படை போலிசார் அங்கு விரைந்தனர். ஆனால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்தும் மாயமானார்.
எனவே, அவர் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் விமான நிலையங்களிலும் நாட்டின் எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள காசியாபாத் பகுதியில் வைத்து சிவசங்கர் பாபாவை போலிசார் கைது செய்துள்ளனர்.

