சென்னை: கொரோனா மூன்றாவது அலையைச் சமாளிக்கும் கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது என சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோவை, பொன்னேரி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நிரந்தர உயிர்வாயு உற்பத்தி நிலையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
"கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
"மாநிலத்தில் இதுவரை 1,737 பேர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்குச் சிகிச்சை அளிக்கவும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன," என்றார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
கொரோனா பாதிப்பால் இறந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் அன்றாட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரை அம்மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

