செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dfa6be78-c8f5-4193-9a70-09ac55ca91c1
-

22ஆம் தேதி காவிரி ஆணையக் கூட்டம்

புதுடெல்லி: காவிரி ஆணையக் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாதந்தோறும் நடத்தப்பட வேண்டிய இந்த ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கொரோனா நெருக்கடி காரணமாக பல மாதங்களாக நடத்தப்படவில்லை. தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ளதால் போதுமான தண்ணீர் இருப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதையடுத்து காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் மாநிலம் தழுவிய அளவில் மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ(எம்எல்) ஆகிய நான்கு கட்சிகள் எதிர்ப்பியக்கம் நடத்த உள்ளன. எதிர்வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை இந்த இயக்கம் நடத்தப்படும் என அக்கட்சிகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளைத் திரும்பப் பெறுவது, உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பது, வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அக்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

அரசு: ஆங்கில வழிக் கல்விக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்படும்

சென்னை: இடம்பெயரும் மாணவர்களின் நலன் கருதி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான வசதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளர். "ஊரடங்கின்போது தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் பல பெற்றோர்கள் அரசுப் பள்ளியை நாடி வருகிறார்கள். எனினும் அவர்கள் ஆங்கில வழிக் கல்வியை எதிர்பார்ப்பதால் அவர்களின் கோரிக்கையைக் கவனிக்க வேண்டி உள்ளது. எனவே, ஆங்கில வழிக் கல்விக்குரிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

கல்லணை: தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர்: டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில், பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்துவிட்டார்.