ஒரே நாளில் தமிழக ஊடகங்களில் விறுவிறுப்பாக பரவியது இந்தப் பாட்டியின் புகைப்படம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் பெற்ற கொரோனா நிவாரணத் தொகையான நான்கு 500 ரூபாய் தாள்களை ஒரு கையிலும் மளிகைப் பொருள்களை மற்றொரு கையிலும் அணைத்தவாறு வெள்ளந்தியான அவருடைய சிரிப்புதான் சிறப்பு.
இந்தப் பாட்டியின் படத்துடன் மேலும் சிலருடைய படங்களையும் சேர்த்து, "ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு" என்று பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் தமது ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டார்.
ஒரு நாளில் பிரபலமான, அனைவராலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரது மனதிலும் இடம்பிடித்த பொக்கை வாய் சிரிப்புக்குச் சொந்தமான இந்தப் பாட்டியின் பெயர் வேலம்மாள்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள கீழகலுங்கடி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள், 90. இவருடைய கணவர் தர்மலிங்கம் 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
இந்தப் பாட்டிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மகன் பால்மணி உள்ளூரில் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிகிறார். மகள் அருள்மணி, திருப்பூரில் உள்ள தமது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
கீழகலுங்கடியில் மகள் இருந்தபோது அவருடன் வேலம்மாள் வசித்து வந்தார். பின்னர், சிறிது காலம் மகனுடனும் இருந்தார். பின்னர் மகனுடன் ஒத்துப்போகாததால் தற்போது அதே ஊரில் உள்ள தமது தங்கையின் வீட்டுத் திண்ணையில் தங்கிக் கொள்கிறார். வெயிலாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் இந்தத் திண்ணைதான் பாட்டிக்கு வசிப்பிடம்.
குடும்ப அட்டைதாரர்களுக்கான கொரோனா நிவாரண உதவியாக இரண்டாவது தவணை ரூ.2,000, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்ட வேலம்மாளுக்கு அளவற்ற ஆனந்தம். ரூபாய் நோட்டுகளுடனும் மளிகைப் பொருள்களுடனும் அவர் சிரித்த படம்தான் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
"எனக்குச் சொந்த ஊர் கலுங்கடிதான். இங்குதான் பிறந்து வளர்ந்ததெல்லாம்."
"எனக்கு இங்கு தேவாலயத்தில் உள்ள பாதிரியார் தினமும் உணவு கொண்டு வந்து தருவார். எங்கள் ஊரில் உள்ளவர்கள் காசு தருவார்கள். அதைக் கொண்டு நான் சாப்பிட்டுக் கொள்கிறேன். மகன் உள்ளூரில் இருந்தாலும் ஒத்துப்போகாததால் எனது தங்கை வீட்டுத் திண்ணையில் தங்கிக்கொள்கிறேன்.
"எனக்கு கண் சரியாகத் தெரியாது. நான் இங்கு தனியாகத்தான் இருக்கிறேன். தெருவில் படுத்திருக்கிறேன். எனவே, தமிழக முதல்வர் எனக்கு தங்குவதற்கு ஒரு வீடு தந்தால் நன்றாக இருக்கும். எனது ஆயுள் காலம் வரை நன்றியுள்ளவளாக இருப்பேன்.
"தமிழக அரசு அளித்துள்ள இந்தப் பணம் எனக்கு பம்பர் பரிசு கிடைத்ததுபோல் உள்ளது. இந்தத் தொகையை தேநீருக்காகவும் சாப்பாட்டிற்காகவும் செலவு செய்கிறேன். மேலும், இந்தப் பணத்தைக் கொண்டு நல்ல சேலை ஒன்றை எடுத்துக்கொள்வேன்," என்றார் வேலம்மாள்.

