மாதவரம்: மாதவரத்தில் உயிர் நண்பர்கள் இருவர் 40 ரூபாய் கடனுக்காக ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து சண்டை போட்டுள்ளனர். இந்த சண்டை முற்றியதில் இளையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்தவர் கைதாகி உள்ளார்.
சென்னையை அடுத்த மாதவரம் உடையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற மணிகண்டன், 25. இவர், மாதவரத்தில் உள்ள தனியார் பட்டறையில் வேலை செய்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய நண்பர் நாகமுத்து, 26. இவர்கள் இருவரும் தங்களது இதர நண்பர்களுடன் சேர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை மது அருந்தினர்.
மாலையில் நண்பர்கள் அனை வரும் சென்றுவிட மணிகண்டன், நாகமுத்து இருவர் மட்டும் உடையார் தோட்டம் 3வது தெருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது நாகமுத்து, மணி கண்டனிடம் தனக்குத் தரவேண்டிய ரூ.40 கடனைத் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் நண்பர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த நாகமுத்து, அங்கிருந்த இறைச்சிக் கடையில் இருந்த கத்தியை எடுத்து மணிகண்டனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

