சேலம்: 'யுடியூப்' மூலம் பிரபலம் அடைந்த மதன் என்ற இளையரை போலிசார் தொடர்ந்து தேடி வரும் நிலையில், இந்த வழக்கில் ஒரு புது திருப்பமாக அவரது மனைவியும் 'யுடியூப்' நிர்வாகியுமான கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
'யுடியூப்' காணொளியில் மதனுடன் அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தைகளைப் பேசி இளையர்களைக் கட்டிப்போட்டது இந்த கிருத்திகாதான் என்பதும் இந்தக் காெணாளிகள் மூலம் மாதம்தோறும் ரூ.7 லட்சம் வரை மதன் சம்பாதித்து வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
கைதான கிருத்திகாவை காவல்துறையினர் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அவரை ஜூன் 30ஆம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேலத்தைச் சேர்ந்த மதன், இணைய விளையாட்டுகளை எப்படி ஆடவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாகக் கூறி ஏராளமான சிறுமியருடன் ஆபாசமாகப் பேசி வந்துள்ளார். மேலும் சிலரிடம் பணம் பறித்து மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இப்படி 'யுடியூப்' மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகம், 'பிட்காய்ன்' போன்றவற்றில் மதன் முதலீடு செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதனின் குடும்பத்தினரைச் சுற்றி போலிசாரின் வலை இறுகி யுள்ள நிலையில், மதன் சரணடைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, முன் பிணை கேட்டு மதனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், மதனின் 'யுடியூப்' காணொளிகளைப் பின்தொடர்வோரில் 30% பள்ளி மாணவர்கள் என காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, "மதன் பேசி யதைக் காதுகொடுத்து கேட்க முடியவில்லை. குழந்தைகளைக் கெடுக்கும் வகையிலும் பெண்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளார். மதனின் பேச்சை நீங்கள் காது கொடுத்து கேட்டுள்ளீர்களா?'' எனக் கேட்ட நீதிபதிகள், மதனின் பேச்சைக் கேட்டுவிட்டு இன்று 18ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர்.

