வழிபாட்டுக்கு கோயில்கள் திறப்பு
திருச்சி: தமிழகத்தில், "பக்தர்களின் வழிபாட்டுக்காக விரைவில் கோயில்கள் திறக்கப்படும்," என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சோளிங்கர் நரசிம்மர் கோவில், திருநீர்மலை முருகன் கோவில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்களுக்கு 'ரோப் கார்' சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசர சிகிச்சை வாகனத்தை
இலவசமாக தந்த பாரிவேந்தர் எம்பி
பெரம்பலூர்: ரூ.17 லட்சம் மதிப்பிலான அவசர சிகிச்சை வாகனத்தை பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் தனது தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளார். தனது சொந்த செலவில் வழங்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட ப்ரியாவிடம் ஒப்படைத்த அவர், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உயிர்வாயு செறிவூட்டிகளையும் இலவசமாக வழங்கினார். கொரோனா முதல் அலையின் போது பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு 60 டன் அரிசி, காய்கறிகள் வழங்கிய நிலையில், இப்போதைய இரண்டாம் அலையில் 60 படுக்கை வசதிகளைச் செய்து தந்துள்ளார்.
பேருந்துகள் இயங்குவது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
சென்னை: ஊரடங்கில் தளா்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பேருந்துகளை இயக்குவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிருமி பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக நகரப் பேருந்துகளை இயக்கவும் திருவள்ளுவா் படத்துடன் திருக்குறள் பலகையை மீண்டும் பேருந்துகளில் பொருத்தவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு ரூ.3,691 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நான்கு மடங்கு அதிகமாக தமிழக மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.3,691 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார். "ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய மத்திய அரசு ரூ.3,691 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 1.26 கோடி வீடுகளில் உள்ள மக்கள் பயன்பெறுவர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
1,700 மதுபோத்தல்கள் விற்பனை:
இரு காவலர்கள் பணி இடைநீக்கம்
திருச்சி: திருச்சி மாவட்டம், சிறுகனூர் போலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சுமதி என்ற பெண் காவல் ஆய்வாளரையும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜா என்ற காவலரையும் பணி இடைநீக்கம் செய்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட 1,700 மதுபாட்டில்களை விற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

