117,184 காவலர்களுக்குத் தலா ரூ.5,000
சென்னை: கொவிட்-19 சூழலில் களப்பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 117,184 காவல்துறையினரின் தன்னலமற்ற பணிகளை அங்கீகரித்து, ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்குத் தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார். இதற்காக ரூ.58.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
'பப்ஜி' மதன் கைது; தோழியருக்கு வலை
தருமபுரி: தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டு மூலமாகச் சிறார்களைத் தவறான வழிகளில் திசைதிருப்புவதாகவும் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும் புகாரளிக்கப்பட்ட நிலையில், தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதன் நேற்று கைது செய்யப்பட்டார். மதனின் யூடியூப் ஒளிவழிக்கு நிர்வாகியாகச் செயல்பட்ட அவரின் மனைவி கிருத்திகா சில நாள்களுக்குமுன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மதனுடன் இணையம் வழியாக ஆபாசமாகப் பேசிய அவரின் தோழிகளையும் பிடித்து விசாரிக்க போலிஸ் திட்டமிட்டுள்ளது.
'குடி'மகன்களால் குடை விலை கூடியது
திருப்பூர்: சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏதுவாக மதுக்கடைக்கு குடையுடன் வரவேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம், சாமிநாதபுரம் அரசு மதுக்கடைக்குமுன் குடை விற்பனையும் வெகுவாக நடந்து வருகிறது. இதனால், முன்னர் ரூ.180க்கு விற்கப்பட்ட குடை, இப்போது ரூ.250க்கு விற்கப்படுகிறது.
முகக்கவசத்தை விழுங்கிய நாய்
மதுரை: முகக்கவசத்தை விழுங்கியதால் உணவுண்ண முடியாமல் தவித்து, உயிருக்குப் போராடி வந்த நாயைக் கால்நடை மருத்துவர் காப்பாற்றினார். மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த குரு என்பவர்க்குச் சொந்தமான அந்த நாய், கடந்த ஒன்பது நாள்களாக எதையும் உண்ணாமல் இருந்தது. இதையடுத்து, ஆனையூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அந்நாயின் உடலை 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது, அது துணியாலான முகக்கவசத்தை விழுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரைப் பிடிக்க தனிப்படை
மதுரை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று நடிகை சாந்தினி அளித்த புகாரை அடுத்து, போலிசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனைத் தேடி வருகின்றனர். அவருக்கு எதிராக சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

