தமிழகத்தில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது
சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நன்கு குறைந்து வருகிறது.
மாநிலத்தின் எந்த மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு விகிதம் 15 விழுக்காட்டுக்கு மேல் இல்லை என மாநிலச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மே மாதம் அன்றாடம் பாதிக்கப்படும் புது நோயாளிகளின் எண்ணிக்கை 33 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் அது ஒன்பதாயிரமாக குறைந்தது.
அதிக பாதிப்புள்ள மாவட்டங்களின் பட்டியலில் கோவை தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஈரோடு, சேலம், சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு, நாமக்கல் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை மதுரையில் தற்போது 2,827 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அன்றாட தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 1,700இல் இருந்து இப்போது 164ஆக குறைந்துள்ளது. மேலும் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் ஜூன் மாத இறுதிக்குள் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முற்றிலும் கட்டுக்குள் வரும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் தமிழகத்தில் 8,633 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 287 பேர் மாண்டுவிட்டனர். அதேசமயம் நேற்று முன்தினம் 19,860 பேர் கிருமி தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.
மேலும் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று
சென்னை அருகே உள்ளே வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா டெல்டா தொற்றின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இப்பூங்காவில் உள்ள 13 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா தாக்கத்துக்கான அறிகுறிகள் இருப்பது கடந்த 3ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நீலா என்ற ஒன்பது வயது பெண் சிங்கம் உயிரிழந்தது.
இதையடுத்து பத்மநாபன் என்ற 12 வயது ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், மேலும் இரு பெண் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளன. அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா கிருமித்தொற்றை தடுக்க தமிழக அரசு சிறப்பு பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
புதுவையில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரொக்கப் பரிசு
புதுவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
அங்கு கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கிவிடப் பட்டுள்ளது.
தினமும் ஊசி போட்டுக் கொண்டவர்களில் 25 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

