மதுரை: தமிழகத்தில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரின் உத்தரவின் பேரில் வணிகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வரிக்கொள்கை காரணமாக தமிழக அரசுக்கு வரவேண்டிய 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மதுரை மண்டல வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதற்கு முன்னிலை வகித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகம் மட்டுமல்லாது மேலும் பல மாநில அரசுகள் மத்திய அரசின் வரிக் கொள்கையால் வருமானத்தை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.
"தமிழகம் நான்கு விழுக்காடு அளவு வருவாய் இழந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 80 ஆயிரம் கோடியாகும்.
மேலும் கொரோனா நிவாரண நிதி கொடுத்த வகையில் 9 ஆயிரம் கோடியும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு ரூ.1,200 கோடியும் செலவிடப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
எனினும் இவற்றையெல்லாம் தமிழக அரசு இழப்பாகக் கருதாது என்றும் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் 35 ஆயிரம் கோடி ரூபாயை வைத்துதான் தமிழக அரசு இயங்குவதாகக் கூறப்படுவது தவறு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"மாநில அரசுக்கு வரவேண்டிய 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் மத்திய அரசிடமிருந்து வந்தால் எதற்காக டாஸ்மாக் மது வருமானம் தேவைப்படும்? நல்ல மேலாண்மை கொள்கைக்காக, அடிப்படை தத்துவத்திற்காக, சமூக நீதிக்காக நாம் இருக்கும்போது குறுக்குவழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
"சட்ட அமைப்பின்படி நேரடி வரி விதிப்பு எல்லாமே மத்திய அரசிடம் தான் குவிந்துள்ளது. மாநில அரசுக்கு உரிமை இல்லாததால் மறைமுக வரியை வைத்துதான் அரசு செயல்பட வேண்டி உள்ளது," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

