சென்னை: பாலியல் வழக்கில் சிக்கி உள்ள சிவசங்கர் பாபா (படம்) சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.
அவரது பெண் சீடர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் பகுதியில் ஆசிரமம் அமைத்துள்ள 78 வயதான சிவசங்கர் பாபா பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மூன்று முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின்பேரில் தமிழக போலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் தற்போது வெளிநாடுகளில் வாழும் முன்னாள் மாணவிகள் சிலரும்கூட அவர் மீது புகார் அளிக்க முனவந்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில் வட இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற அவரை டெல்லியில் வைத்து போலிசார் கைது செய்தனர்.
பின்னர் தமிழகம் அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். முன்னதாக செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவிகளிடம் ஆசை காட்டி, மிரட்டி சிவசங்கர் பாபாவின் ஆசைக்கு இணங்க வைத்த புகாரின் பேரில் பெண் சீடர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவசங்கர் பாபா நடத்தி வந்த பள்ளியில் ஆசிரியையாக இருந்த ஒருவரும் கைதாகி இருப்பதாகத் தெரிகிறது.
தமது பள்ளியில் ரகசிய சொகுசு அறையை சிவசங்கர் பாபா நிர்மாணித்திருந்ததாகவும் அதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் 'வெப் துனியா' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுஷ்மிதா அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி என்றும் கூறப்படுகிறது.

