அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்
சென்னை: மருத்துவப் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவப் பரிசோதனை முடிந்ததும் சிறப்பு சிகிச்சையும் பெற உள்ளார் என்றும் மூன்று வாரங்கள் தங்கி ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருடன் குடும்பத்தாரும் அமெரிக்கா சென்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கறுப்புப் பூஞ்சை நோய்க்கு மூதாட்டி பலி
விருதுநகர்: கறுப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 70 வயது மூதாட்டி திடீரென உயிரிழந்தார். கடந்த மே 30ஆம் தேதி அன்று அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொன்மணி என்ற அந்த மூதாட்டி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பலனாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வியாழக்கிழமை மாலை வீடு திரும்பினார் பொன்மணி. இந்நிலையில், நேற்று முன்தினம் தலைவலியும் பல் வலியும் கடுமையாக இருப்பதாக கூறிய அவர், அடுத்த சில நிமிடங்களில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேகதாது வழக்கு ஆய்வுக் குழுவை கலைத்தது பசுமைத் தீர்ப்பாயம்
புதுடெல்லி: மேகதாது அணை தொடர்பான வழக்கு ஆய்வுக்குழுவைக் கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அணை கட்டுவதற்கான கட்டுமான மூலப் பொருட்களை அணை கட்டும் இடத்தில் கேரள அரசு குவித்து வைத்துள்ளதாகவும் அணை கட்டப்பட்டால் அப்பகுதி சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் ஊடகத்தில் வெளியான செய்தியை அடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும், வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணை கட்டப்படும் பகுதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அணை தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் பசுமை தீர்ப்பாயத்தின் ஆய்வுக்குழு அமைக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கர்நாடக அரசு வலியுறுத்தியது. இதையடுத்து குறிப்பிட்ட ஆய்வுக்குழுவை கலைத்துள்ளது பசுமை தீர்ப்பாயம்.
சீமான்: தமிழ் வளர்ச்சி துறையின்
பெயர் மாற்றத்தை ஏற்க இயலாது
சென்னை: தமிழ்மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 'தமிழ் வளர்ச்சித்துறை' அமைச்சின் பெயர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மாற்றப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 'தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை' எனப் பெயர் மாற்றம் செய்து அதனை தொழில் துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பாக அளித்திருப்பதை ஏற்க இயலாது என அவர் கூறியுள்ளார்.

