முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்; ஆளுநர் உரையாற்றுகிறார்
சென்னை: சட்டமன்றத்தில் விருப்பு வெறுப்புக்கு இடமின்றி உறுப்பினர்கள் பேச நேரம் ஒதுக்கப்படும் என்றும் ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் உரிமை வழங்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். தமிழகத்தின் 16 வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தொடரைத் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து முக்கிய துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அப்பாவு கூறுகையில், "சட்டசபை கூட்டத் தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. அது கட்டாயம் நிறைவேற்றப்படும். 'நீட்' தேர்வு குறித்த பாதிப்புகளை ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும்.
"பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தபோது இதுதொடர்பாக வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். சட்டசபையில் ஜனநாயக முறைப்படி, விருப்பு வெறுப்பின்றி நேரம் ஒதுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
இதன்பின் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்குச் சென்று ஆளுநர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தார். சட்டசபையில் உரையாற்ற வரும்படி முறைப்படி அவர் அழைப்பு விடுத்தார்.
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்நிலையில், சட்டப் பேரவை கூட்டத் தொடரை ஒட்டி நாளை திங்கட்கிழமை திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
அவரது அறிவிப்பில், "திமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறும். கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்," என்று கூறப்பட்டு உள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு பதில் அளிப்பது, எப்படி பேரவையில் உரையாற்றுவது என்பன போன்ற பல்வேறு அறிவுரைகள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

