சென்னை: 60 வயதைக் கடந்த நீரிழிவு நோய், இதயப் பிரச்சினை, உடல் பருமனுடன் உள்ள மூத்தோர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
'ஹலோ எஃப்எம்' வானொலியில் நேற்று காலை ஒலிபரப்பான 'ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில் பேசிய அைமச்சர், "கொரோனா இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதற்கு மக்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணம்," என்று பாராட்டு தெரிவித்தவர், "மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழகம் தயார்நிலையில் உள்ளது. அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் 80% அளவுக்கு ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு உள்ளன.
"இந்தத் தொற்றுப் பிரச்சினை முடிந்த பிறகு மருத்துவத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்தும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
8,183 பேருக்குப் பாதிப்பு; 18,000 பேர் குணம்
இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,183 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதாகவும் இத்தொற்றில் இருந்து மேலும் 18,232 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,14,680 பேராக உயர்ந்துள்ளது. இவர்களில் 23,04,885 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
கிருமி பாதிப்பு குறைந்தாலும் தினசரி உயிரிழப்பு குறையாமல் 200க்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 31,015 ஆக அதிகரித்துள்ளது.

