ரூ.2 ேகாடி நிதி வழங்கிய 'லைக்கா'
சென்னை: மாநில அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.2 கோடியை பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வழங்கியுள்ளது. 'லைக்கா' நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில், 'லைக்கா' நிர்வாகிகள் தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர். கொரோனா பரவலைத் தடுக்கவும் மக்களுக்குத் தேவையான உயிர்வாயு, தடுப்பூசி போன்ற வற்றின் தேவைக்காகவும் தாராள நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
இதையடுத்து, திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர், மக்கள் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
சிறுமிகளைத் திருமணம் ெசய்த இரு ஆடவர்கள் கைது
கோவை: கோவையில் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர் 'போக்சோ' சட்டத்தின்கீழ் கைதானார். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், 22, தான் காதலித்து வந்த 17 வயது சிறுமியை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து ராமச்சந்திரன் கைதானார்.
மற்றொரு சம்பவத்தில், கூலித் தொழிலாளியான போடிப்பாளையத்தைச் சேர்ந்த பிரதாப், 26, பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர் புகார் அளித்த நிலையில், பிரதாப், அவரது தாய் காளியம்மாள், 40, கைதாகினர்.
ரத்தான பத்து சிறப்பு ரயில்கள் மீண்டும் இயங்கின
சென்னை: கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக, போதிய பயணிகள் இன்றி ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் நேற்று முதல் மீண்டும் இருவழிகளிலும் இயங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஆலப்புழா, மேட்டுப்பாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதி களுக்கும் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மதனை ஜூலை 3 வரை சிறையில் அடைக்க உத்தரவு
சென்னை: தருமபுரியில் மத்திய குற்றப்பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்ட 'யூடியூப்' பிரபலம் மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். அப்போது, மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி பரமசிவம் உத்தரவிட்ட தைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுவரொட்டியால் திமுக அதிர்ச்சி
திண்டுக்கல்: நாளை 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிறது. இதை முன்னிட்டு திண்டுக்கல் முழுவதும் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும் 'ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா; தலைமை ஏற்க வா' என்று அழைப்பது போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.


