முதல்வரை சந்தித்த ஆளுநர் தமிழிசை
சென்னை: தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, "தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு இப்போதுதான் தமிழகம் வருகிறேன். புதிய முதல்வருக்கு வாழ்த்துகளைக் கூறினேன். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், கோதாவரி திட்டம் குறித்து விவாதித்ேதாம்," என்றார்.
சென்னையில் பேருந்து, மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கின
சென்னை: ஜூன் 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடப்புக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் ஏறக்குறைய 40 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இயங்கியது. அதேபோல், சென்னையில் மட்டும் 1,800 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பேருந்து, ரயில் பயணிகள் சென்னையில் இயல்பு நிலை திரும்பி விட்டதுபோல் உணர்வதாகக் கூறியுள்ளனர். மெட்ரோ ரயில், பேருந்தில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார்.
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
சென்னை: ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கத் தேர்வாகி உள்ள வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு (படம்) தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. உலகளவில் பல்வேறு வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்று இவர் பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது இத்தாலியில் பயிற்சி பெற்றுவரும் பவானிதேவி, மேலும் சில பயிற்சிகளைப் பெற நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசிடம் கோரியிருந்ததை அடுத்து, முதல்வர் அவரது தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் 28 நாள்களில் தடுப்பூசி
சென்னை: தமிழகத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளதால், வெளிநாடு செல்பவர்கள் மட்டும் 28 நாள்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் மற்றவர்கள் 12 வாரங்கள் கழித்தே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

