நீலகிரி: கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நாடெங்கும் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
மற்றொரு பக்கம் இந்த தடுப்பூசியால் ஆபத்து விளையும் என்ற வதந்தியும் பரப்பி விடப்படுவதால், ஒரு சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசி போட வருபவர்களைக் கண்டு ஓடி ஒளியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாதிகளுக்கு தடுப் பூசி போடும் பணி பெரும் சவா லாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 28,000 பழங்குடியின மக்கள் உள்ளனர்.
அவர்களுக்குத் தாதிகள் தடுப்பூசி போட வருவது குறித்து தெரிந்தால், உடனே அவர்கள் வனப் பகுதிக்குள் ஓடி ஒளிவது, வீட்டின் வெளிக்கதவைப் பூட்டிவிட்டு உள்ளே இருப்பது, கட்டிலுக்கு அடியில், போர்வைக் குவியலில் என பதுங்கிக்கொள்கின்றனர்.
தடுப்பூசி போட வருபவர்களை சிலர் திட்டவும் செய்கிறார்கள்.
அவர்களின் மொழியில் பேசி விளக்கி, தடுப்பூசி போடும் பணி களில் மருத்துவரும் மருத்துவப் பணியாளர்களும் ஈடுபட்டு வரு கின்றனர்.
இதனால் இங்குள்ள பழங்குடியின மக்களுக்குத் தடுப்பூசி போடுவது சவாலான பணியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூரில் குரும்பர், பனியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பந்தலுார் வனப் பகுதிகளில் குடியிருக்கும் பழங்குடி மக்கள் தடுப்பூசிக்குப் பயந்து ஓடி ஒளியும் நிலையில், இரவு நேரத்தில் அவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள், மூதாட்டிகளுக்குத் தடுப்பூசி போட முடிகிறது.
வேலைக்குச் செல்பவர்கள், வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் இரவில் வீடுகளுக்குத் திரும்பும் சூழலில் சுகாதாரத் துறையினர் காத்திருந்து தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி பழங்குடியின மக்களுக்குத் தடுப்பூசி போடவும் மருத்துவத்துறையினர் மிகவும் சிரமப்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

