மதுரை: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாள்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.75,000 வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அத்துடன், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கையில் கட்டை விரலை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த கணே சன் தாக்கல் செய்த மனுவில், என் மனைவிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மே 25ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையில் இருந்த ஊசியை எடுத்தபோது குழந்தையின் இடது கை கட்டை விரல் துண்டிக்கப் பட்டது. எனவே, கவனக்குறைவாகச் செயல்பட்ட தாதியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உரிய இழப்பீடு வழங்கவும் அறுவை சிகிச்சை மூலம் என் குழந்தையின் கட்டை விரலைப் பொருத்தவும் உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

