சென்னையில் ஒருவருக்கு 'டெல்டா பிளஸ்' கிருமித் தொற்று
சென்னை: கேரளா, மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் உருமாறிய 'டெல்டா பிளஸ்' கொரோனா தொற்றால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் மாநிலத்தில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நான்கு மாநிலங்களில் மட்டும் 40 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரியாணி வாங்க குவிந்த மக்கள்; திறந்த நாளன்றே மூடப்பட்ட கடை
தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரியாணிக் கடை ஒன்றில், ரூ.70க்கு ஒரு பிரியாணி வாங்கினால், மற்றொரு பிரியாணி பொட்டலம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடையின் வாயிலில் பிரியாணியை வாங்கிச் செல்லும் ஆர்வத்தில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு நின்றனர். கொரோனாவை மறந்து, சமூக இடைவெளியையும் மறந்து மக்கள் திரண்டதால் பிரியாணி விற்பனையை நிறுத்தும்படி அரசு அதிகாரிகள் கூறினர். இதனால், திறப்பு விழா அன்றே கடையை மூடினர் கடை உரிமையாளர்கள்.
சக்கர நாற்காலியில் ஒரு நோயாளி போல் தங்கம் கடத்தியவர் கைது
சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு நேற்று காலை சிறப்பு விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் நோய்வாய்ப் பட்டவர் போல் நடித்து, சக்கர நாற்காலியில் வந்த முகமது அபுபக்கா், 62, என்ற முதியவரை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அபுபக்கா் அணிந்திருந்த காற்சட்டைப் பையில் நான்கு தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 465 கிராம் எடை கொண்ட, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்தது விசாரணையின்போது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்று முதல் புறநகர் ரயில்களில்
பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி
சென்னை: சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணம் செய்யலாம் என்றும் ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத நேரத்தில் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
22,000 பேருக்கு வேலை ஏற்பாடு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், திண்டிவனம், செய்யாறு ஆகிய இரண்டு நகரங்களிலும் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற் சாலைகள் நிறுவப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

