சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களிலும் இனியும் காலம் தாழ்த்தாமல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக, பாஜக, மநீம உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேேபால் பாஜகவும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் தலைமையில் மாநிலச் செயற்குழு கூட்டம் காணொளி வாயிலாக நேற்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சித் தேர்தல், பாஜக வளர்ச்சிப் பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நாளை தனது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். புதிய நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.