செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
36df9def-c215-4a43-930d-62d91a9bc601
-

முகக்கவசம் அணியாமல் பிடிபட்டால் ரூ.500 அபராதம்

கோவை: நேற்று முதல் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்களும் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்ததைத் தொடர்ந்து, ரயில் நிலையம், ரயில்களில் முகக்கவசம் அணியாமல் சிக்கினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா கிருமி பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொற்றை முழுவதுமாக துடைத்ெதாழிக்க முகக்கவசம் அணிவது, கை கழுவுதல், தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது மிகமிக முக்கியம் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

'அதிமுக ஆட்சியிலும் அணில்கள் இருந்தன, மின்வெட்டு இல்லை'

கரூர்: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அடிக்கடி மின் வெட்டு பிரச்சினை ஏற்படுவதற்கு, "செடி கொடிகள் மட்டுமல்ல, அணில்கள் மின் கம்பியில் தாவி ஓடுவதும் ஒரு காரணம்," என்று அண்மையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கூறியிருந்தார். இதற்கு, கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் பதிலடி கொடுத்துள்ளார். "அணில்கள் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில்தானே இருந்தன? அப்போது ஏன் மின்வெட்டு ஏற்படவில்லை? மின் தடைக்கு உண்மையாகவே அணில்கள்தான் காரணமா?" என வினவியுள்ளார்.

வெளிநாடு செல்பவர்களுக்கு புதிய வசதியாக தடுப்பூசிச் சான்றிதழ்

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்பவர்கள் கோவின் இணையத் தளத்தில் தங்களது பாஸ்போர்ட் தகவலைப் பதிவிட்டு, தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடு செல்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன்படி இருமுறை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் கோவின் இணையத்தளம் மூலம் தங்கள் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள புதிய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

கழைக்கூத்தாடி குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சன்னதி புதுக்குளம் கிராம எல்லையில், அரசுப் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடுகளில் கழைக்கூத்தாடி மக்கள் சிலர் வசித்து வருகின்றனர். வீதிகளில் கழைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் 11 குடும்பங்களைச் சேர்ந்த கழைக்கூத்தாடி மக்களுக்கு நேற்று காலை இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.