சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் ஓய்ந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வார காலத்துக்கு மேலும் பல புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நாளை 28ஆம் தேதி காலை முதல் ஜூலை 5ஆம் தேதி காலை வரை பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைத் தொடர்ந்து கூடுதலாக மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துப் போக்கு வரத்து, சமய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி, நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் திறப்பு, சென்னையில் பேரங்காடிகளைத் திறப்பதற்கு நாளை 28ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரேநாளில் அதிகபட்சமாக 36,000 பேர் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், மாநில அரசின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் கிருமிப் பரவல் 5,751 ஆக குறைந்துள்ளது.
கிருமி பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு இடையே 50% இருக்கைகளுடன் குளிர்சாதன வசதியற்ற பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அருங்காட்சியகங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.
கிருமி பாதிப்பு அதிகமுள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களிலும் சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
காலை 6 முதல் இரவு 7 மணி வரை தேநீர் கடைகளில் 'பார்சல்' சேவைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. பாத்திரக் கடைகள், அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப் பில் பொதுவான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 11 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு 'இ-பாஸ்' அனுமதி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த முதல்வர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறு வீரர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
"விளையாட்டில் தொடர்ந்து ஆர்வம் காட்டினால் அமெரிக்கா போன்ற நாடுகளையும் எளிதில் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற முடியும். ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஏழு தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி.
"ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடியும் வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடியும் வெண்கலப் பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும் வழங்கப்படும்," என்று கூறினார்.

