செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
30856a32-f77a-4f5b-927d-cc3aff61611b
-
Google News Preferred Icon

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு தொல்லை; போலிஸ் அதிகாரி கைது

சென்னை: துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாக துணை போலிஸ் அதிகாரி ஒருவர் மீது பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை, மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். இந்தச் சம்பவம் உண்மை என்பது தெரியவந்ததை அடுத்து, மாதவரம் போலிஸ் அதிகாரி சதீஷ்குமார், 38, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ரேவதி, பெரியம்மா நீலாவதி ஆகியோரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக புகார்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கன்போட் சுற்றுக்காவல் கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர், திடீரென மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது, மூன்று மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்தன. ஜெகதீஸ், சிலுவை, அருளானந்தம், பிரவீன், பீட்டர், கிளிண்டன், சிஸ்கோ உள்ளிட்ட ஒன்பது மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதையடுத்து, கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத்துறை, உளவுத்துறை அதிகாரிகளிடம் இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து புகார் தெரிவித்தனர்.

மணிகண்டனுக்கு பிணை மறுப்பு

சென்னை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி, தனது உயிருக்கு மிரட்டல் விடுத்ததாக 'நாடோடிகள்' பட நடிகை சாந்தினி அளித்த புகாரைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், "விசாரணை இன்னும் முடிவடையாததால் பிணை வழங்கமுடியாது," எனக் கூறி மணிகண்டன் சார்பில் மீண்டும் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

சென்னை, ஈரோட்டுக்கு விருது

ஈரோடு: மத்திய அரசின் சீர்மிகு நகரங்களுக்கான விருதுகள் பட்டியலில் சென்னை, ஈரோடு மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளன. காற்று மாசுபடுவதைக் குறைத்தல், புதை கம்பிவடம் மூலம் மின் விநியோகம் வழங்கியது, கொரோனா தடுப்புப் பணியில் புதிய முயற்சிகளை செயல்படுத்தியது ஆகிய காரணங்களுக்காக முதலிடம் வகித்த சென்னைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேேபால் ஈரோடு மாவட்டம் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் மூன்றாவது இடத்திலும் சிறந்த நகரம் பிரிவில் முதலிடத்திலும் வந்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சுவிரட்டு: 20 பேர் மீது வழக்கு

சிவகங்கை: சிவகங்கை அருகே பாகனேரியில் ஊரடங்கை மீறி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நடத்தியதாக 20 பேர் மீது மதகுப்பட்டி போலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். நிகழ்ச்சியை நிறுத்துமாறு போலிசார் எச்சரிக்கை விடுத்தும் காதில் போட்டுக்கொள்ளாமல் மஞ்சுவிரட்டு நடந்துள்ளது.