சென்னை: இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பின்பற்றுவதற்கு ஏற்ற முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தமிழக பொருளியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜான் ட்ரீஸ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பொருளியலை மேம்படுத்த முதலமைச்சருக்கான பொருளியல் ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
அந்தக் குழுவில் டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஜான் ட்ரீஸ் உள்ளிட்ட ஐவர் இடம்பெற்றுள்ளனர். பெல்ஜியம் நாட்டில் பிறந்து இந்தியக் குடியுரிமை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கின்ற ஜான் ட்ரீஸ், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது பொருளியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தவர்.
100 நாள் வேலைத் திட்டம் மற்றும் தகவல் உரிமைச் சட்டம் போன்ற திட்டங்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர் இவரே ஆவார்.
டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்சில் கௌரவ விரிவுரையாளராக இருக்கும் அவர், தினத்தந்தி செய்தித்தாளுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் பல கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். குறிப்பாக குழந்தை வளர்ச்சி, சுகாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களில் இருந்து அதிக அம்சங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
"அதேபோல் சேவைத் துறையிலும் உற்பத்தியிலும் தமிழகம் இந்தியாவின் பொருளியல் தலைவனாக மாறி உள்ளது.
"சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்தது. ஆனால் இப்போது தமிழகத்தின் வளர்ச்சியைக் காணும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.
"இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தமிழகத்தின் மனிதவளம் என நினைக்கிறேன். ஏழை மக்களுக்கான கல்வியின் மூலம் கல்வியின் தரம் இங்கு உயர்ந்து இருக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வாழ்க்கைத்தரம் பல மாநிலங்களைவிட சிறந்தது என்றாலும் தமிழகத்தில் குறிப்பாக கிராமப் புறங்களில் இன்னும் ஏழை மக்கள் உள்ளதாக திரு ஜான் ட்ரீஸ் தெரிவித்து இருக்கிறார்.

