மதுரை: தமிழ்நாட்டில் அப்போதைக்கு அப்போது மின்தடை ஏற்படுவதற்கு முந்தைய ஆட்சியின் குறைபாடுகளும் அணில் போன்ற பிராணிகளும் ஏற்படுத்தும் தொல்லைகளும் காரணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் பல படங்களையும் இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.
ஆனால் இந்த விவகாரம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, அணில் கண்டுபிடிப்பிற்காக திரு செந்தில் பாலாஜிக்கு நோபெல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கிண்டலடித்து இருக்கிறார்.
"நல்ல வேளை, நான் பிழைத்துக்கொண்டேன். தெர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று திமுகவினர் கிண்டல் செய்தார்கள்.
"இப்போது என்னை விஞ்சி அணிலைக் கண்டுபிடித்து உள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
எங்கள் ஆட்சியில் அணில் எல்லாம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டன போல. இந்த ஆட்சியில்தான் அணில் மின் கம்பியில் போகிறது.
"இதைக் கண்டுபிடித்த செந்தில் பாலாஜிக்கு நோெபல் பரிசு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு செல்லூர் ராஜு கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, அமைச்சராக இருந்த திரு செல்லூர் ராஜுவின் திட்டப்படி, வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்க அணைகளில் உள்ள நீர்நிலைகளை அதிகாரிகள் தெர்மாகோல் அட்டைகளால் மூடினார்கள்.
ஆனால் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கியதால் அத்திட்டம் தோல்வியடைந்தது.
அது சமூக வலைத்தளங்களில் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது.

