கல்வித் தொலைக்காட்சியைப் பார்த்து படிக்க ஊக்குவிப்பு
திருச்சி: தமிழ்நாட்டில் கொவிட்-19 காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடிக்கிடக்கின்றன. தனியார் பள்ளிகள் இணையம் மூலம் பாடம் நடத்தி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், வி.ரவிச்சந்திரன் (படம்) என்ற திருச்சி மாவட்ட வெங்கடாசலபுரம் கிராம அரசு உதவி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர், அந்தக் கிராமத்தில் வீதி வீதியாக சென்று தண்டோரா போட்டு, மாணவர்கள் அனைவரும் கல்வித் தொலைக்காட்சியைப் பார்த்து பயன்பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சுற்றுலாத் துறை மேம்பட
16 பேர் குழு அமைப்பு
சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்களை வகுப்பதற்காக 16 பேர் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. சுற்றுலாத் துறை இயக்குநர் குழுவின் தலைவராகச் செயல்படுவார். குழுவில் பல துறைகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுலா தொடர்புடைய சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தெரு மாடுகள் மீது அமில வீச்சு: அதிகாரிகள், போலிஸ் விசாரணை
மதுரை: மதுரை தல்லாங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மீது அமிலத்தையும் கொதிக்கும் எண்ணெய்யையும் ஊற்றி யாரோ பாவச் செயல்களைச் செய்வதாகவும் அதனால் கால்நடைகள் உடல் வெந்து, சிகிச்சை இன்றி படாதபாடு படுவதாகவும் போலிசிடம் புகார் தாக்கலாகி இருக்கிறது. இது குறித்து அதிகாரிகளும் போலிசாரும் தீவிர புலன்விசாரணை தொடங்கி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
சென்னை-பாரிஸ் நேரடி
விமானச் சேவை தொடங்கியது
சென்னை: சென்னையிலிருந்து பாரிஸுக்கு நேரடி விமானச் சேவை வெற்றிகரமாகத் தொடங்கியது. பாரிஸில் இருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் சனிக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கு 111 பேருடன் சென்னையில் தரையிறங்கியது.
அதைக் காட்டும் காணொளியை சென்னை விமான நிலையம் டுவிட்டரில் வெளியிட்டது.
சனி, திங்கட்கிழமைகளில் இந்தச் சேவை இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. சுற்றுப் பயணிகளிடையே இந்தச் சேவை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெட்ரோல் விலை கடும் உயர்வு
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் விலை தாறுமாறாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐத் தாண்டியது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 50 பைசாவாக நேற்று விலை நிர்ணயிக்கப்பட்டது.

