குடிநீர் தட்டுப்பாடு; தாமரைச்செல்வி
கிராம மக்கள் எச்சரிக்கை
திருநெல்வேலி: நெல்லை அருகே உள்ள தாமரைச்செல்வி கிராமத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக எங்களது அன்றாட தண்ணீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இல்லையெனில், எங்களது ஆதார் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
'வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துகிறது திமுக'
மதுரை: சட்டமன்றத் தேர்தலின்ேபாது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக காலம் தாழ்த்தி வருவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குறை கூறியுள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "பெட்ரோல்-டீசல் விலைக் குறைப்பு, பழைய ஓய்வூதியத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி,'' என பல வாக்குறுதிகளைத் தேர்தல் நேரத்தில் அள்ளி வீசிய திமுக, இப்போது அவற்றை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துகிறது. கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றவேண்டும்," என்று வலியுறுத்தி உள்ளார்.
சிவசங்கர் பாபாவை மூன்று நாள்கள் விசாரிக்க அனுமதி
செங்கல்பட்டு: மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில்ஹரி அனைத்துலகப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலிசாருக்கு செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு சிவசங்கர் பாபா அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 19ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, குணம் அடைந்த பின்னர் கடந்த 26ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீடு வழங்கக் கோரி எம்.கே.
தியாகராஜ பாகவதரின் பேரன் மனு
சென்னை: வாடகை கொடுக்க வழியில்லாமல் கஷ்டத்துடன் வாழும் தங்களுக்கு அரசு சார்பில் வீடு ஒன்றை ஒதுக்கித்தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகில் புகழ்பெற்ற எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் சாய்ராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த 14 படங்களில் 10 படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இந்நிலையில், "எங்களது குடும்பத்தினர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர். அனைவருமே சூளைமேட்டில் உள்ள அண்ணன் வீட்டில் வசிக்கிறோம். எங்களால் வீட்டிற்கு வாடகை கொடுக்கமுடியாத நிலை உள்ளது. எனவே வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு எங்களுக்கு ஒரு வீட்டை ஒதுக்கினால் அது எங்களுக்குப் பேருதவியாக அமையும்," என்று சாய்ராம் கூறியுள்ளார்.

