தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் உள்ள பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் சுமார் இரண்டு அடி முதல் நான்கு அடி வரை உயரம் உள்ளன. இவற்றில் ஐந்து முதுமக்கள் தாழிகள் சேதமடையாமல் மூடியுடன் முழுமை யாக உள்ளது தெரியவந்துள்ளது.
அத்துடன், தமிழ் பிராமி எழுத்து களுடன் கூடிய பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த திருப்பத்தின் காரணமாக உற்சாகம் அடைந்துள்ள தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை யினர் கூறுகையில், "சிவகளை யில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரே குழியில் இப்போதுதான் 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றை விரைவில் திறந்து பார்த்து ஆய்வு செய்யப்படும்.
"பழங்காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை அறியும் வகை யிலும் அகழாய்வுப் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகளை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை," என்று கூறினர்.
முந்தைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள் முதுமக்கள் தாழிகள் எனப்படும். 'தாழியுடன் கவிப்போர்' என மணிமேகலை காப் பியத்தில் இவ்வழக்கம் குறித்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

