திருப்போரூர்: பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை, 73, மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் சிபிசிஐடி போலிசாருக்கு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து, சிவசங்கர் பாபாவை கேளம்பாக்கத்தில் அவர் நடத்தி வந்த சுஷில் ஹரி அனைத்துலகப் பள்ளி வளாகத்தில் உள்ள சொகுசு அறைக்கு அழைத்துச் சென்று போலிசார் விசாரணை செய்தனர்.
அப்போது அவரைக் கைதியாக பார்த்த பள்ளி ஆசிரியர்கள் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
சிவசங்கர் பாபாவைக் காண வந்திருந்த அவரது பக்தர்கள், சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று, கைதட்டினர். 'சிவசங்கர் பாபா மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு உள்ளது' எனக் கூறிய அவர்கள், அவரை வேனில் அழைத்துச் செல்லும்போது கண்ணீர் விட்டு அழுதனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் சிவசங்கர் பாபா விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்தி வந்த மடிக்கணினி, 'பென் டிரைவ்', வன்பொருள் உள்ளிட்டவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர்.
அதோடு, சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் கணக்கையும் ஆய்வு செய்தனர். அதில், மின்னஞ்சல் மூலம் மாணவிகளுக்கு ஆபாச தகவல்களை அனுப்பிய விவரத்தையும் போலிசார் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து அவரது மின்னஞ்சல் முடக்கப்பட்டது.
தனது உதவியாளரின் கைபேசி மூலம் மாணவி ஒருவருடன் காெணாளி வழி பேசியதற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும் சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கு முதலில் மறுப்பு தெரிவித்த சிவசங்கர் பாபா, ஆதாரங்களைக் கைப்பற்றிய நிலையில், புகாரை ஒப்புக்கொண்டதாகவும் போலிசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16ஆம் தேதி கைது செய்து சென்னைக்கு போலிசார் அழைத்து வந்தனர்.

