சென்னை: தமிழக டிஜிபியாக பொறுப்பு ஏற்றுள்ள சைலேந்திரபாபு, சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழக காவல் துறையின் 30வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திரிபாதி அவருக்கு மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, தமிழக காவல் துறையின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம் என்று குறிப்பிட்டார். "இந்த அரிய வாய்ப்பை தந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் வாயிலாக தரப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விசாரித்து முடிவு காணப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். பொது மக்களிடம், போலிசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும். போலிசாருக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்படும், " என்று திரு சைலேந்திரபாபு கூறினார்.